கி.மு. 300 இல் விஷ்ணு சர்மா சொன்ன விலங்குக்
கதைகளின் தொகுப்பு பஞ்சதந்திரம். இது நமக்கு வாழ்க்கைப் பாடங்களைக விலங்குக் கதைகளின்
மூலம் கற்று கொடுக்கிறது.
பஞ்சதந்திரம் நீதி ஸாஸ்திரத்தின் பாடநூல்
. “நீதி” என்றால் வாழ்க்கையின் புத்திசாலித்தனம்.
அதாவது “பொது அறிவு”. வாழ்க்கையில், நாம், அறிவியல், கலை, கணினிகள், மருத்துவம் மற்றும்
பலவற்றைக் கற்றுக்கொள்கிறோம். ஆனால் பொது அறிவை
உபயோகப் படுத்தாவிட்டால் இந்த பாடங்கள் எதுவும் பயனளிக்காது. துரதிர்ஷ்டவசமாக, எந்தவொரு
பள்ளியிலும் பொது அறிவு ஒருபோதும் பாடமாக கற்று
கொடுக்க படுவதில்லை. ஏனெனில் அது வாழ்க்கையில் தானே கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என கருதப்படுகிறது. எனினும் நம்மிடம் பஞ்சதந்திரம்
இருப்பதால் நாம் அதிர்ஷ்டசாலிகள்.
நீதி சாஸ்திரம் பின்வரும் கொள்கைகளைச்
சொல்கிறது. “எனக்கு பாதுகாப்பு தேவை. எனக்கு பணம் தேவை. எனக்கு நல்ல நண்பர்கள் தேவை.
என்னால் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க முடிய வேண்டும்". ஒற்றை வார்த்தை, நீதி
இவ்வளவு பொருளை எவ்வாறு உள்ளடக்கியது என்பது நம்பமுடியாதது!
பஞ்சதந்திரம் எப்படி சொல்லப்பட்டது என்பதை
பார்ப்போம். ஒரு காலத்தில் அமர சக்தி என்று ஒரு மன்னர் இருந்தார் . அவர் மஹி லாரோபியம் என்ற ராஜ்ஜியத்தின் அரசர்.மன்னர் ஒரு
அறிஞராகவும் சக்திவாய்ந்த ஆட்சியாளராகவும் இருந்தார்.ஆனால் அவரது மூன்று மகன்களான வாசு
சக்தி, உக்ர சக்தி மற்றும் அனேக சக்தி ஆகியோர் ஏமாறக்கூடியவர்களாக இருந்தார்கள். அரசர்
கவலையுடன் யோசித்தார், “என் குழந்தைகள் ஒரு நாள் வளருவார்கள். நான் இறந்த பிறகு அவர்கள்
இந்த ராஜ்யத்தை ஆள வேண்டியிருக்கும். அவர்களுக்கு அரசாங்கம், அல்லது அரசியல், ஏன் சாதாரண
வாழ்க்கையை நடத்தக் கூட எந்த அறிவும் இல்லை. அவர்களுக்கு இவற்றையெல்லாம் கற்பிக்க நான்
என்ன செய்வது? ஐயோ! அவர்களுக்கு எதுவுமே மண்டையில் ஏறுவதில்லையே”,என்று கவலைப் பட்டார்.
அவர் தனது அமைச்சர்களைக் கூட்டி அவர்களின்
ஆலோசனையைப் கேட்டார். அவருடைய அமைச்சர்கள் பதிலளித்தனர்.“அரசரே! மொழி இலக்கணத்தை மட்டுமே
கற்றுக்கொள்ள குறைந்தபட்சம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதற்கு மேல், உங்கள் குழந்தைகள்
அர்த்த சாஸ்த்ரம் ,காம சாஸ்த்ரம் மற்றும் மனு சாஸ்த்ரம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள
இன்னும் பல ஆண்டுகள் ஆகும்”, என்றனர்.
மன்னர் சோகமடைந்தார். தனது மகன்கள் எத்தனை
நாட்களானாலும் எதையும் கற்றுக் கொள்வார்கள்
என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை.அவரது மந்திரி தொடர்ந்தார், “இருப்பினும் விஷ்ணு
சர்மா என்ற அறிஞர் இருக்கிறார். அவர் நீதி ஸாஸ்த்திரத்தில் வல்லவர் என்று பலரால் நன்கு
அறியப்பட்டவர். உங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும்படி அவரிடம் கேட்கலாம்” என்றார்.
ராஜா சிறிது நம்பிக்கை அடைந்தார்.
விஷ்ணு சர்மா வரவழைக்கப்பட்டு, உரிய
மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், அவர் ராஜாவின் துயரங்களைக் கேட்டார். ராஜா தன்னுடைய
மூன்று மகன்களைப் பற்றியும், அவர்களுக்குக் கல்வி கற்பதற்கான அவசியத்தைப் பற்றியும்
சொன்னார். தன்னுடைய மகன்களைளை புத்திசாலியாக்கி
விட்டால் அவர் விஷ்ணு சர்மாவுக்கு ஒரு பெரிய
தொகையை கொடுப்பதாக கூறினார்.
அதற்கு விஷ்ணு சர்மா, “அரசரே! நான் உங்கள்
பணியை மேற்கொள்வேன், ஆனால் எனக்கு பணம் எதுவும் தேவையில்லை. எனக்கு இப்போது எண்பது
வயது. பொருள் உடைமைகள் மீதான அனைத்து ஆர்வத்தையும் நான் இழந்துவிட்டேன். இந்தக் காரியத்தை
உங்கள் நலனுக்காக மட்டுமே செய்வேன். இன்றைய தேதியைக் குறி த்துக் கொள்ளுங்கள். ஆறு மாத காலத்திற்குள் நான்
உங்கள் மகன்களை நீதி சாஸ்த்ரங்களில் வல்லவர்களாக மாற்றாவிட்டால், நீங்கள் என்னை அடித்துத்
துரத்தி விடுங்கள்” என்றார். இந்த தைரியமான
பதிலைக் கேட்டு மன்னர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். ஆனால், தனது மகன்கள் கல்வி கற்பதற்கான வழியைக் கண்டுபிடித்ததில்
அவர் மகிழ்ச்சியடைந்தார். அவர் தன் மகன்களை விஷ்ணு ஷர்மாவிடம் ஒப்படைத்தார்.
விஷ்ணு சர்மா ராஜாவின் மூன்று மகன்களுக்கு
கல்வியைக் கதைகள் மூலம் கற்பிக்கத் தொடங்கினார்,
அவரது கதைகள் பஞ்சதந்திரம் என்று அழைக்கப்பட்டன, அதில் ஐந்து தந்திரங்கள் அல்லது தொகுதிகள்
உள்ளன.
முதலாவது மித்ரபேதம் என்று அழைக்கப்படுகிறது,
அதாவது “நண்பர்களின் இழப்பு”. இந்த தந்திரம் எதிரிகள் அல்லது எதிரிகளின் காரணமாக நல்ல
நண்பர்களை எவ்வாறு இழக்க கூடும் என்பதைக் கற்றுக் கொடுக்கிறது. இது எதிரிகளை பலப்படுத்துகிறது.
இரண்டாவது மித்ரசம்ப்ராப்தி என்று அழைக்கப்படுகிறது,
அதாவது “நண்பர்களை
வெல்வது”. நண்பர்களை எப்படி சம்பாதிப்பது,
மற்றும் அவர்களை இழந்தால் மீண்டும் எப்படி அடைவது என்பதை விளக்குகிறது. பரஸ்பர நன்மைக்காக
நட்புகளை எப்படி உருவாக்கலாம் என்பதையும் விளக்குகிறது.
மூன்றாவது காகோலூகீயம் என்று அழைக்கப்படுகிறது.
இதன் பொருள் “காகங்கள் மற்றும் ஆந்தைகள்”. இந்த தந்திரம் இரண்டு நண்பர்களுக்கு இடையே
சந்தேகமும் சச்சரவும் எப்படி அவர்களை பலவீனமாக்குகிறது
என்பதைக் காண்பிக்கிறது. ஆந்தைகளுக்கும் காகங்களுக்கும் இடையிலான பகைமையைக் காட்டுவதன்
மூலமும் ஒன்று மற்றொன்றை எவ்வாறு அடக்குகிறது என்பதன் மூலமும் இது விளக்கப்படுகிறது.
நான்காவது லப்தப்ரணாசம். லப்த ப்ரணாசம் என்றால் சம்பாதிப்பதை தொலைப்பது.
ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், முன்பு சம்பாதித்ததை எப்படி பின்னால் இழந்து விடுவோம்
என்பதை விளக்குகிறது இந்த தந்திரம்.
ஐந்தாவது மற்றும் இறுதியானது அபரீக்ஷிதகாரகம். அதாவது
“அவசர செயல்கள்”. யோசிக்காமல் செய்யும் செயல்கள்எப்படி
மோசமான விளைவுகளைத் தரும் என்பதை விளக்குகிறது இந்த தந்திரம்.
பஞ்சதந்திரத் தொடரை சொல்வதை நான் எனது
பல ஆசிரியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அதில் மிக முக்கியமானதும், முதன்மையானவரும் என்
தாயார். இந்தக் கதையை சொல்வதை நான் மிகவும் ரசிக்கிறேன். என்னைப் போலவே நீங்களும் அனுபவிப்பீர்கள்
என நம்புகிறேன்.