ராஜாவின் மூன்று மகன்களையும் விஷ்ணு சர்மா தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர் அவர்களிடம், “காட்டில் ஒரு சிங்கமும்
ஒரு காளையும் மிகுந்த நட்புடன் வாழ்ந்து வாழ்ந்தன. ஆனால் ஒரு தந்திரசாலி
மற்றும் சூழ்ச்சி மிக்க குள்ளநரி மூலம் அவர்களின் நட்பு உடைந்தது” என்றார். "அது எப்படி நடந்தது?" என்று ராஜாவின் மூன்று மகன்களும் கேட்டனர். அதற்கு விஷ்ணு சர்மா பின்வரும்
கதையை விவரித்தார்.
மஹிலாரோபியம் என்னும் நகரில்
வர்தமானகர் என்ற செல்வந்தரான வணிகர் இருந்தார். ஒரு நாள், பணத்தைப் பற்றிய ஒரு பழமொழியை
அவர் நினைவு கூர்ந்தார்.
உங்களிடம்
அது இல்லையென்றால், அதை சம்பாதிக்க கடுமையாக முயற்சிக்கவும் !
நீங்கள்
அதை சம்பாதித்தவுடன், அதை நன்கு பாதுகாக்கவும் !
நீங்கள்
அதைக் பாதுகாக்கும்போது, எப்போதும் அதை வளரச்
செய்யுங்கள் !
அது
வளர்ந்ததும், அதை தானம் செய்யுங்கள் !
வர்தமானகர் செல்வந்தரான வணிகர். அவர் தனது
தொழிலை வளர்க்க விரும்பினார். எனவே, அவர் தனது பொருட்களை
விற்க மதுராவுக்கு புறப்பட்டார். அவர் தனது வர்த்தகப் பொருட்களை ஒரு வண்டியில்
ஏற்றினார். அந்த வண்டி நந்தகன் மற்றும்
சஞ்சிவகன் என்ற இரண்டு காளைகளால் இழுக்கப்பட்டது. செல்லும் வழியில் வர்தமனகர் அடர்ந்த காட்டின் வழியாகப் பயணிக்க வேண்டியிருந்தது. அவர் காட்டின் உள்ளே சென்று கொண்டு இருந்தபோது,
அவரது காளைகளில் ஒன்றான சஞ்சிவகன் தற்செயலாக ஈரமான மண்ணில் காலை வைத்து
விட்டது. அதன் கால்
உடனடியாக உள்ளே இழுக்கப்பட்டு சஞ்சிவகன் காயமடைந்தது. பட்ட காயம் மோசமாக இருந்ததால்
அதனால் அதற்கு மேல் நகர முடியவில்லை.
வர்தமனகர் காளையின் காலை சரிசெய்ய முயன்றார்.
ஆனால் முடியவில்லை. அவர் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்று கொண்டிருந்தார். காடு பல ஆபத்துக்கள்
நிறந்த இடம். அவர் காளையை மிகவும்
நேசித்தார் என்றாலும், அவரால் காளையுடன் தங்க முடியவில்லை. அதனால் வர்தமனகர் சஞ்சிவகனை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவர் தனது சில
ஊழியர்களை காளையை கவனிக்கும்படி கட்டளையிட்டு, அங்கேயே விட்டு விட்டு பின் தனது
பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால் ஊழியர்களுக்கோ தங்கள் பாதுகாப்பு குறித்த பயம். அதனால்
சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் காளையை
அங்கேயே விட்டுவிட்டு, தங்கள் எஜமானனுடன் போய் சேர்ந்து கொண்டனர்.
சஞ்சிவகன் இறந்துவிட்டதாக அவர்கள் அவரிடம் பொய் சொன்னார்கள்.
சஞ்சிவகன் உண்மையில் இறந்திருக்கவில்லை. காலப்போக்கில்,
அது குணமடைந்து காட்டில் வாழத் தொடங்கியது. காட்டில் வளர்ந்திருந்த செழுமையான புற்களைத் தின்று கொண்டும், யமுனா நதியின் தண்ணீரைக் குடித்துக் கொண்டும் ஆரோக்கியமாக வளர்ந்து வந்தது.
அதே காட்டில் பிங்கலகன் என்ற சிங்கம் வாழ்ந்து
வந்தது. அந்த சிங்கம் காட்டின் ராஜா. யாரிடமும் அதற்கு பயம் கிடையாது.
ஒரு நாள், பிங்கலகன் சஞ்சிவகனின் உறுமலைக் கேட்டது. பயத்தில் உறைந்து போய் விட்டது. எப்போதும்
காட்டில் மட்டுமே வசித்து வந்த அது
இதற்கு முன்பு ஒரு காளையின் உறுமலைக்
கேட்டதில்லை. பிங்கலகன் பீதியடைந்தது. அது காட்டின் உள்ளே சென்று ஆழ்ந்த சிந்தனையுடன்,
ஒரு ஆலமரத்தின் கீழ் அமர்ந்தது. அவரது அமைச்சர்கள் மற்றும் காட்டின் பிற விலங்குகள் பிங்கலகனை சூழ்ந்திருந்தன.
இதையெல்லாம் இரண்டு குள்ளநரிகள் பார்த்துக்கொண்டிருந்தன.
அவர்கள் விவேகமுள்ள கரடகன் மற்றும் தைரியமான தமனகன்.அவர்கள்
சிங்கத்தின் முன்னாள் அமைச்சர்களின் மகன்கள். ஆனால் இப்போது வேலை
இல்லாமல் இருந்தனர்.
ராஜா ஏதோவொன்றைப் பற்றி கவலைப்படுவதை உணர்ந்த தமனகன் கரடகனிடம், “நண்பரே! ஏதோ நம் ராஜாவை
தொந்தரவு செய்துள்ளது. அது என்னவாக இருக்கும்?”
என்றது.
அதற்கு கரடகன், “நமக்கென்ன அதைப் பற்றி? தனக்கு சம்பந்தமில்லாத
விஷயங்களில் தலையிடுபவர்கள் நிச்சயம் ஆப்பு அசைத்த குரங்கைப் போல் அழிவை எதிர்
கொள்வார்கள்" என்றது. “குரங்கு என்ன செய்தது?”
என்று ஆர்வத்துடன் கேட்டது தமனகன்.
கரடகன் ஆப்பை அசைத்த குரங்கின் கதையைச் சொன்னது.